பொருளடக்கத்திற்கு தாவுக

கலகம்-கவிதை

நவம்பர் 18, 2010

கடந்த காலங்களில் தோழர் கலகம் எழுதிய பழைய கவிதை- நான் ரசித்த கவிதைகளில் ஒன்று  தோழர் கலகத்தின் அனுமதியோடு மீள் பதிவு செய்திருக்கிறேன்.

கவிதைகள் – ,சிரியுங்கள்

சிரிப்பதெற்கென்றெ நாள்

ஒருநாள் கற்றுக்கொடுக்கிறது

உலகம்.,இளிக்கிறான் உலக

வங்கி -மின்னுகிறது தங்கப்பல்….

சிரிப்பு தினம்

பெண்கள் தினம்

தாய் தினம்

தந்தையர் தினம்

சடங்குகள் தொடர்கின்றன….

கடற்கரையோரம் சிறு கூட்டம்

சிரிக்கிறது – சிரித்தால்

ஆயுள் அதிகரிக்குமாம்

அன்னிய செலாவணி

போல வீங்கிய உடல்கள்

வாய்கள் இளித்துக் கொண்டே

இருக்கிறது-எங்கள்

கண்ணீரின் முதலீட்டில்….

உழைத்து உழைத்து

வெடித்து போன எங்கள்

உதடுகளை

உங்களால்சிரிக்க வைக்க முடியாது….

விவசாயி,தொழிலாளி

வணிகர்கள் என அனைவரும்

அழுதுகொண்டிருக்க

சிரியுங்கள்,சிரியுங்கள்

சிரித்து கொண்டேயிருங்கள்…

அழுது அழுது வற்றிபோன

எங்கள் கண்களில் கண்ணீர் இல்லை

கலகம் ஒன்றே யெங்களை

சிரிக்க வைக்கும் உங்களை

கதறவும் வைக்கும்.

கவிதைகள்-அழகு


அழகென்றால்
எதுவென்று விடை
தேடி புறப்பட்டேன்…..

உச்சி முதல் உள்ளங்கால்
வரைஒவ்வொன்றும்
வரிசையாய் வந்தன,
நீ நான் என போட்டி
போட்டுக்கொண்டு……

சிறும் பல், பெரும் பல்
தெத்து பல் பலவும்
பல்லளித்து பறைசாற்றின
பற்களெல்லாம் அழகெனில்
ஊத்தைவாயன் சங்கரனின்
பல்லும் அழகா ? …

ஒல்லி குச்சிகால்கள்
கேட்வாக்கில்
ஒய்யாரமாய்
நடை போட்டு நடந்தன
நடப்பதோ சுடுகாட்டை
நோக்கி இதில் நாய்
நடையே நடந்தாலும்
கேட்க ஆளில்லை…..

உடைகள் மேலே
ஏற ஏற
அழகுகள்
கூடிக்கொண்டே போகின்றன……

இது தான் அழகா
இல்லை இல்லை
அழகென்றால் எது
வென்று செப்புகின்றேன்
கேளிர்
பண்பட்ட நிலமழகு
கூரொடிந்த ஏரழகு
உழைப்பாளியின்
வியர்வையழகு தொழிலாளியின்
அசதியழகு,அழகு அழகு
ஆயிரமழகு புரட்சி
அதனினும் அழகு
மக்கட்படை…

அன்று புரியவைப்போம்
நீங்கள் அழகுகள் அல்ல
இந் நாட்டின் அசிங்கங்கள் என்று.

நன்றி
தோழர் கலகம்

ஒபாமா இந்தியா வருகை ! வரவேற்க சொல்கிறார் வைகோ !!

நவம்பர் 6, 2010

Obama India Visit

Obama India Visit

மெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார். இன்றைய உலகமயமாக்களின் ஆண்டவனான அமெரிக்க அதிபரை வரவேற்க அடிமை மன்மோகன் அரசு அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆண்டவனை திருப்திபடுத்தினால்தான் பூசாரி வாழமுடியும், அதனால் ஆண்டவன் ஒபாமா வருகையின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதில் தீவிர கவனம் எடுத்துவருகிறது பூசாரியின் அரசு. ஒபாமாவின் வருகையின் நோக்கம் என்ன? ஒபாமா வந்து தேவர்களுக்கு எந்தவிதமான் அருளாசி வழங்க போகிறார்?

என இது போன்ற பல கேள்விகள் நம்முள் எழுந்தாலும் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

கோயிலினுள் பார்ப்பனன் மணியாட்டிக் கொண்டு பூசை Š புனசுகாரம் செய்யும்போது வாசலில் பண்டாரம் மணியாட்டிக்கொண்டிருக்கிறான் அது யாருமல்ல நம் புரட்சிபுயல் வைகோ அவர்கள்தான். ஒபாமா வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாக இசுலாமிய அமைப்புகளும், போலி கம்யூனிஸ்டுகளும் அறிவித்திருந்தனர், உடனே நம் புரட்சிபுயலுக்குஇரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. என்னது ஒபாமாவுக்கு எதிர்ப்பா! ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமாவை வரவேற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என பிச்சு உதறிவிட்டார். சரி ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்ததால்தான் வைகோ ஒபாமவை வரவேற்க பரவசப்படுகிறார் இல்லையா! ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் அதிபராக இருந்திருந்தால் வைகோ சிங்கமாக கிளர்ந்தெழுந்திருப்பார் இல்லையா? அதுதான் இல்லை. உலகளவிலே ஒடுக்கபட்டிருக்கும் பெண்சளின் நடுவே ஹிலாரி என்கிற பெண் அமெரிக்க அதிபராகியிருக்கிறார் அவரை வரவேற்பது நமது கடமை என முழங்கியிருப்பார். சரி ஹிலாரியும் இல்லை ஒபாமாவும் இல்லை  வேறு யாராவது அமெரிக்க அதிபராகியிருந்தால்?  என நீங்கள் கிடுக்கிப்பிடி போடுவது தெரிகிறது. அப்படி வேறு யாராவது வந்திருந்தாலும் பெயரை மட்டும் மாற்றி  இதே அறிக்கையை விட்டிருப்பார் வைகோ.

அமெரிக்க அடிவருடி என்பதில் கூச்சப்பட தேவையில்லை

ஏங்க அந்தாளு எதற்காக அமெரிக்க் அதிபரை எதிர்க்க வேண்டும். அவர்தான் ஈழத்துக்காக ராஜபக்சேவை கிழி கிழியயன்று கிழிக்கிறாரே என்று கேட்கலாம். கேள்விகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட  நீக்ரோ இனத்தில்  பிறந்த ஒபாமா தனது கறுப்பின ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கின்ற வெள்ளையின வெறிக்கு எதிராக குரல் கொடுத்து போராடி அந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக அதிபராக உயர்ந்தாரா?  ஒபாமாவிடம் தான் ஒரு ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வுதான் இப்போது இருக்கிறதா என்ன? அப்படி ஒபாமாவை ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக நம்புவதும், நம்பசொல்லுவதும் அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் ஒடுக்கபடுகின்றார்கள் என்பது நிதர்சனம், ஆனால் கறுப்பின மக்களின் பிரதிநிதியாக ஒபாமவை சொல்ல முடியாது. இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள் கே.ஜி. பாலகிருஷ்ணன்  தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர், அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கே நீதியரசனாக இருந்தவர், அவரை தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்தவர் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என சொல்லத்தான் முடியுமா? தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்காக கே.ஜி.பாலா என்ன போராடினார்?  அவர் ஒடுக்குமுறை அரசின் கருவி. பார்ப்பன பாசிச கருத்துக்களையே தீர்ப்பாக வழங்கியவர். சமூக நீதி போராட்டத்தை ஒரு தலித் நீதிபதியாவதை வைத்தோ, ஒரு முடிதிருத்துபவர் அமைச்சர் ஆவதை வைத்தோ எடை போட முடியும் என்றால் சமூக நீதி போராட்டத்துக்கு  என்றைக்கோ கல்லரை கட்டியிருக்கலாம். நூற்றில் ஒருவனுடைய ஒய்யார வாழ்க்கையை வைத்து ஒரு இனத்தின்/சாதியின் முன்னேற்றத்தை கணக்கெடுக்க முடியாது.

என்ன வைகோவை அப்படியே விட்டு விட்டீர்கள் என நீங்கள் கேட்பது  காதில் விழுகிறது.

பாலஸ்தீனம், ஆப்கான் மற்றும் இராக் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டங்கள் நாமறிந்ததே. மனித குலத்துக்கெதிரான பேரழிவு வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அமெரிக்க வல்லூருக்கு எதிரான  அனைத்து விதமான போராட்டங்களையும் ஆதரிப்பது  உலகெங்கும் அடக்குமுறைக்கெதிராக போராடும் மக்களின் கடமை.

இரண்டு முகம்

சூழலோ இப்படியிருக்க வைகோ ஒபாமாவை வரவேற்க ஆராத்தி தட்டோடு வாங்க என அழைப்பு விடுக்கிறார். மறுபக்கமோ ராஜபக்சேவுக்கெதிரான  இன அழிப்பு விசாரணைக்குகுரல் கொடுக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவை வெள்ளையுடை தேவதையாக சித்தரிக்க முயற்சிக்கிறார். அடக்குமுறைக்கெதிராக போராடுபவர்களின் மத்தியில் பிளவு உண்டாக்க முயற்சிக்கிறார்.

அமெரிக்க விசுவாசமே என் சுவாசம்


இந்தியாவும் கொலைகார  ராஜபக்சேவின் அரசும் இணைந்து ஈழத் தமிழர்கள் மேல் நடத்திய இன அழிப்பு போரில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என நம்ப சொல்கிறாரா வைகோ. இராக்கிலும் ஆப்கானிலும் மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் போருக்கும் ஒபாமாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறாரா? அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராஜபக்சேவின் இன அழிப்பு போரை எதிர்ப்பதாக கூறுகிறாரா? தமிழினத்துக்கெதிரான போரைப்பற்றி ராஜபக்சேவிடம் உலக பத்திரிக்கையாளர்கள் கேள்வியயழுப்பிய போது  ‘ இராக்கிலும் ஆபகானிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது “என்று கொக்கரித்தான் . ஆக ராஜபட்சேவுக்கு முன்னோடியாக இருப்பது  அமெரிக்கா.

அமெரிக்காவை ஆதரித்து ராஜபக்சேவை மட்டும் எதிர்ப்போம் என்று வைகோ சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? அதை வைகோவின் மனசாட்சியும் வர்க்கநலன்களுமே விவரிக்கும்.

நாமும் ஒருநாள் வரவேற்பு  கொடுப்போம்.  ஒபாமாவுக்கு மட்டுமல்ல ராஜபக்சேவுக்கும்,

வைகோவுக்கும் சேர்த்தே. ஆனால் வரவேற்பு அவர்கள் நினைப்பது போல் இருக்காது.

அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள  போராடுவோம்

நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

நவம்பர் 6, 2010

கம்யூனிசமே வெல்லும் ! முதலாளித்துவம் கொல்லும் !